சிறப்புரை : 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி

சிறப்புரை : 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி

கல்வி என்பது ஒரு மனிதனிடத்தில் உள்ள முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்வதே

என்று சுவாமி விவேகானந்தர் கூறிச் சென்றார். ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி,

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ (குறள் 396) என உலகப் பேராசான் திருவள்ளுவர்

கூறியதன் வழி மாந்தர்க்குத் தொடர்ந்து கல்வி கற்று அதன் வழி அறிவையும்

ஆற்றலையும் பெறும் நிலை உண்டு என்பதனையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே

உறுதிப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையிலேயே நவீன கால கல்வியாளர்கள்

பல்வேறு கட்டற் கொள்கைகளின் வழி இந்நிலைப்பாட்டினை உறுதி செய்து

வருகின்றனர்.

இன்று கல்வியுலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பல்வேறு நுண்ணறிவுகள், வெற்றிதரும்

நுண்ணறிவுகள், உயர்நிலைச் சிந்தனைத் திறன்கள் போன்ற கட்டற் கொள்கைகளும்

கற்றல் பகுப்பியல்களும் (Taxonomy) இதனைப் பயன்படுத்தியும் பரவலாக்கமும் செய்து

வருகின்றன. மலேசியத் திருநாட்டின் கல்விக் கொள்கையிலும் அறிவு, உடல், உள்ளம்

மற்றும் ஆன்மீகம் எனும் நான்கு கூறுகளாகக் கல்வி வழங்கப்பட்டு முழுமையான

மனிதனைக் கல்வி உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வியின்

அடிப்படை நோக்கம் எக்காலத்திலும் மாறாது. இருப்பினும் அதனை நாம் நோக்கும்

விதம், பெறுகின்ற வழிமுறைகள் மற்றும் அது ஏற்படுத்தும் விளைப்பயன்களில்

மாற்றங்கள் ஏற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

21-ஆம் நூற்றாண்டில் கல்வியை நாம் நோக்கும் நோக்கு நிலை, கல்வியைப் பெறுவதில்

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், இணையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற

வாய்ப்புகள், கற்றல் கற்பித்தலில் ஏற்படுத்தப்பட வேண்டிய முக்கியக் கூறுகளை

இக்கட்டுரை விவாதிக்கும். மேலும், மாணவர்களின் கற்றலில் சமூகத்தினரின் பங்கு,

பெற்றோரின் பங்கு, ஆசிரியர்களின் பங்கு, ஆகியவற்றையும் இக்கட்டுரை விவாதித்தும்;

இக்காலச் சூழ்நிலைக்கேற்ப சில பரிந்துரைகளையும் முன்வைக்கும். இந்த விவாதத்தில்

குறிப்பாகத் தமிழ்க்கல்விக்கு உள்ள தனித்தன்மை மற்றும் தமிழ் சார்ந்த கல்வியில்

அவசியம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கூறுகளும் அடங்கும்.